
புதுடெல்லி, டிச. 26- இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்று, 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். அவரை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிஹார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்ஸர்களுடன் 190 ரன்களை விளாசி சாதனை படைத்தார். மேலும் இந்தப் போட்டியின் போது 36 பந்துகளிலேயே அவர் சதத்தை எட்டி சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேனின் இரண்டாவது வேகமான சதம் இதுவாகும். இதன்மூலம், ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் (14 வயது 272 நாட்கள்) என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார். இந்நிலையில், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி-யான சசி தரூர், வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: ”இந்திய இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடி வருகிறார். 14 வயதான அவர் மிகச்சிறப்பாக தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக ஒரு பதினான்கு வயது சிறுவன் இத்தகைய அபாரமான கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தியது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்தான். அவர் என்ன ஆனார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்னும் நாம் எதற்காக காத்திருக்கிறோம்? வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக. இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார். மேலும், தனது எக்ஸ் தளப் பதிவில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கங்களையும் சசி தரூர் டேக் செய்துள்ளார்.


















