
உக்ரைன் டிசம்பர் 27
தலைநகரான கீவ் நகரம் இன்று காலையில் ரஷ்யாவின் பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் பலத்த குண்டு வெடிப்பு ஒலியுடன் மக்கள் எழுந்தனர். உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுத்தாலும் சில பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிகிறது. உக்ரைன் ராணுவம், டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள
தகவலில் ரஷ்யா குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தது. ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையும் டெலிகிராம் தளத்தில் பரவிய பல்வேறு தகவல் அடிப்படையில் இதை உறுதி செய்துள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்த விவரங்களை திட்டமிட்டும் சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழக்க வேண்டும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உக்ரைனின் விருப்பமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருந்தார், இது இரு நாடுகள் மத்தியிலான தாக்குதலை அதிகரித்துள்ளது. ஜெலன்ஸ்கி டிரம்புடன் ஃப்ளோரிடாவில் டிசம்பர் 28 அல்லது 29ஆம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பில் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீவ் நகரில் தாக்குதல் தொடங்கியதும் வான் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது, இதை தொடர்ந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு அறைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். டெலிகிராம் சேனல்களில் குண்டு வெடிப்புகள் குறித்த செய்திகள் பரவின. உக்ரைன் ராணுவ டெலிகிராம் சேனல் ஒன்று ஏவுகணைகள் நகரை நோக்கி செலுத்தப்பட்டதாக தெரிவித்தது. இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக உள்ளது.


















