தர்மஸ்தலா வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு

பெங்களூரு: டிசம்பர் 30- தர்மஸ்தலா பகுதியில் பலர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் ஜனவரி 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. வழக்கு தொடர்பாக பெல்தங்காடி நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கையின் மீதான விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பு ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி, சிறப்பு விசாரணை குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததில் முகமூடி சின்னையா உட்பட 6 பேர் குற்றவாளிகளாகக் குறிப்பிட்டனர். சிறப்பு விசாரணை குழு சார்பாக ஆஜரான உதவி அரசு வழக்கறிஞர் திவ்யராஜ் ஹெக்டே, விசாரணையின் விவரங்களை பதிவு செய்து மேலும் விசாரணைக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர் சமர்ப்பித்து, சட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 3,923 பக்க அறிக்கையை சமர்ப்பித்து, இந்திய சிவில் சட்டத்தின் கீழ் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரினார். சில முக்கியமான விஷயங்களை அவர் நீதிமன்றத்தில் முன்வைத்து மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரினார். நேற்று வழக்கை விசாரித்த பெல்தங்காடி கூடுதல் சிவில் நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.