சென்னை: ஜனவரி 1-
தமிழகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையொட்டி, மாநிலம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையில் மட்டும் 19,000 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனப் பந்தயங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய இடங்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
அரசால் அனுமதிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள், இனிப்பகங்கள், துணிக்கடைகளில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். பொதுமக்களைக் கவரும் வகையில் பல்வேறு இடங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மகிழ்ச்சியும், வெற்றியும்… ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: இந்த புத்தாண்டு புதிய சக்தி மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளமாக இருக்கட்டும். சுயபரிசீலனை மற்றும் புதிய தீர்மானங்கள் எடுக்கவும் இது நல்ல வாய்ப்பு. இந்நாளில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவோம். 2026 புத்தாண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் செழிப்பான இந்தியாவை உருவாக்க புதிய சக்தியை அளிக்கட்டும்.















