ஜன.6 ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்

சென்னை: ஜனவரி 2-
தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடையுமா என்பது குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 3 ஆவது வாரம் தொடங்கியது. இது தொடங்கி உருவான ஒரு புயல் ஆந்திரா பக்கம் சென்றுவிட்டது. இன்னொன்று டிட்வா, போக்கு காட்டிவிட்டு கடலோர பகுதிகளில் பயணித்தது. இந்த டிட்வா ஓரளவுக்கு மழையை கொடுத்தது.
தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த டிட்வாவுடன் மார்கழியும் பிறந்துவிட்டதால் வெறும் பனிப்பொழிவு மட்டுமே இருந்து வருகிறது. அதிலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றுவிட்டதால் அங்கு உறைபனி உள்ளது. எனினும் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே அந்த அளவுக்கு மழை இல்லை. இந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடைப்பட்டது. எனினும் மக்கள் மழையில் நனைந்தவாறு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
டிட்வா புயலுடன் சென்னைக்கான மழை இல்லாத நிலை ஏற்பட்டு ஏமாற்றம் தந்ததாக பல வானிலை ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். வரும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற கேள்வியும் எழுந்தது.தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் அறிக்கையில், தமிழகத்தில், கடந்த 10 நாட்களாக, மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. லட்சத்தீவு – குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.