தூத்துக்குடி உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி: ஜனவரி 5-
வடகிழக்கு பரு​வ​மழை இறு​திக் கட்​டத்தை எட்​டியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்​டத்​தில் உள்ள உப்​பளங்​களில் ஜிப்​சம் எடுக்​கும் பணி தீவிர மடைந்​துள்​ளது. ஆனால், போதிய விலை கிடைக்​காத​தால் உப்பு உற்​பத்​தி​யாளர்​கள் கவலை​யடைந்​துள்​ளனர்.
தூத்துக்குடி மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்துக்குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முக நேரி பகு​தி​களில் 25 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் அமைந்​துள்​ளன. இவற்​றில் சுமார் 50 ஆயிரம் தொழிலா​ளர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். மாவட்​டத்​தில் ஆண்​டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.
நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத் மாநிலத்​துக்கு அடுத்​த​படி​யாக தூத்துக்குடி உள்​ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்​பத்​திப் பணி​கள் தொடங்​கும். ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை 6 மாதங்​கள்​தான் உப்பு உற்​பத்​திக்கு உகந்த காலம். அக்​டோபர் மாதம் வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கியதும் உப்பு சீஸன் முடிவடை​யும்.
அதன்​படி, கடந்த ஆண்டு சுமார் 19 லட்​சம் டன் உப்பு உற்​பத்​தி​யானது. அதே​நேரத்​தில், குஜ​ராத்​தில் இருந்​தும் உப்பு கொண்டு வரப்​பட்​ட​தால், உப்​புக்கு போதிய விலை கிடைக்​க​வில்​லை. இந்​நிலை​யில், வடகிழக்​குப் பரு​வ​மழை இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ள​தால் கடந்த 2 வாரங்​களாக மழை பெய்​ய​வில்​லை. இதனால் உப்​பளங்​களில் படிந்​துள்ள ஜிப்​சத்தை சேகரிக்​கும் பணியை உப்பு உற்​பத்​தி​யாளர்​கள் தொடங்​கி​யுள்​ளனர்.
இதுகுறித்து உப்பு உற்​பத்​தி​யாளர்​கள் கூறும்​போது, ‘‘உப்​பளங்​களில் இருந்து கிடைக்​கும் ஜிப்​சத்தை சிமென்ட் தயாரிப்​புக்கு வாங்​கிச் சென்​றனர். ஆனால், தற்​போது ஜிப்​சத்​துக்கு மாற்​றாக ஓமனில் இருந்து பவுடர் வடிவத்​தில் ஜிப்​சத்தை இறக்​குமதி செய்து பயன்​படுத்தி வரு​கின்​றனர். இதனால் உப்​பளங்​களில் இருந்து பெறப்​படும் ஜிப்​சம் விலை குறைந்​துள்​ள​தால் பா​திக்​கப்​படு​கிறோம்​’’ என்றனர்​.