சுவர் இடிப்பு – தொடரும் பரபரப்பு

ஹாசன்: ஜனவரி 5-
நிலத்தை ஆக்கிரமித்த புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் யஷ் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டது.
கன்னட திரை உலகின் இளம் நடிகராக இருப்பவர் யஷ். கே.ஜி.எப்., படத்தின் மூலம், ‘நாடு முழுதும் அறியப்பட்டார்.
இவரது சொந்த ஊர் ஹாசன். ஹாசன் டவுன் வித்யா நகரில் யஷ் வீடு உள்ளது. இங்கு, அவரது தாய் புஷ்பா வசிக்கிறார்.
யஷ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் லட்சுமம்மா என்பவர் வசிக்கிறார். இவரது இடத்தில், 1,500 அடி நிலத்தை ஆக்கிரமித்து, யஷ் வீட்டிற்கு காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஹாசன் மாவட்ட 4வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. லட்சுமம்மா தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில், அவரது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதியானது.
இதனால், நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, யஷ் வீட்டின் காம்பவுண்டு சுவரை, சத்தியமங்களா கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், பொக்லைன் மூலம் நேற்று இடித்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.