
ஜோகன்னஸ்பர்க்: ஜனவரி 6- பதினெட்டாம் நுாற்றாண்டின் யோகியும், ஆன்மிக தலைவருமான நீல்கண்ட் வர்ணியின், 42 அடி உயர வெண்கல சிலை, தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் நிறுவப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவின், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நார்த் ரைடிங்கில், பி.ஏ.பி.எஸ்., எனும் போச்சசன்வசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா ஹிந்து கோவில் மற்றும் கலாசார வளாகம் அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயிலில் 18ம் நுாற்றாண்டின் யோகியும், ஆன்மிகத் தலைவருமான நீல்கண்ட் வர்ணியின், 42 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இது தென்னாப்ரிக்காவிலேயே மிக உயரமான வெண்கல சிலையாகும். இது, நைஜீரியாவின் மொரேமி சிலையுடன் இணைந்து, ஆப்ரிக்க கண்டத்தின் நான்காவது மிக உயரமான சிலையாக மாறியுள்ளது-. மொத்தம், 20 டன் எடை கொண்ட இச்சிலை, விருக்ஷாசனம் எனப்படும் ஒற்றைக் காலில் நின்று தவம் புரியும் யோக நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சிறந்த பொறியியல் சாதனையாக பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த திறப்பு விழாவில், பி.ஏ.பி.எஸ்., அமைப்பின் மூத்த துறவி சுவாமி பிரகாஷ் தாஸ் தலைமை வகிக்க, தென்னாப்ரிக்க நிதித்துறை இணை அமைச்சர் அஷோர் சருபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
யார் இந்த நீல்கண்ட் வர்ணி
பகவான் சுவாமி நாராயணின் இளமை கால பெயரே நீலகண்ட் வர்ணி என்பதாகும். இவர் 1781ம் ஆண்டு இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள சப்பையா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் கன்ஷியாம் பாண்டே என்பதாகும்.
தன் 11வது வயதில் ஆன்மிக தேடலுக்காக, வீட்டை விட்டு வெளியேறினார். அப்போதுதான் இவர் ‘நீலகண்ட் வர்ணி’ என்று அழைக்கப்பட்டார். அவர் அடுத்த ஏழு ஆண்டுகள், அதாவது 1792 முதல் 1799 வரை நாடு முழுதும், 12,000 கி.மீ., வெறும் காலால் நடந்து ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.
இவரது பயணத்தின் போது, இமயமலையின் மிக குளிரான பகுதிகளில் மிக குறைந்த ஆடைகளுடன் கடுமையான யோக பயிற்சிகளை மேற்கொண்டார். தற்போது ஜோகன்னஸ்பெர்கில் நிறுவப்பட்டுள்ள சிலையில் இருப்பது போன்று, ஒற்றை காலில் நின்று தவம் செய்ததாக கூறப்படுகிறது. தன் பயணத்தை குஜராத்தில் முடித்த இவர், அங்கு சுவாமி நாராயண் என போற்றப்பட்டார்.
உடன்கட்டை ஏறும் ‘சதி’ எனும் வழக்கத்திற்கு எதிராக போராடினார். பெண் சிசு கொலையை தடுக்க பாடுபட்டார். ஏழைகளுக்கு உணவு வழங்கவும், சமூகத்தில் நிலவிய சாதிய பாகுபாடுகளை நீக்கவும் பல பணிகளை மேற்கொண்டார்

















