சென்னை: ஜனவரி 7-
ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதற்கான புகார் பட்டியல் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் நடைபெற்ற ரூ.4 லட்சம் கோடி ஊழல்கள் குறித்தான புகார் பட்டியல் வழங்கி, அவற்றை விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநரிடம் மனு அளித்து விட்டு, வெளியே வந்தபின் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கடந்த 2021 முதல் நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற ரூ.4 லட்சம் கோடி ஊழல் குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம். திமுக கடந்த 56 மாதங்களாக, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கி,தமிழகத்தில் மிக மோசமான நிர்வாகம் செய்துள்ளது. இதனால் ஏற்கெனவே இருந்த கடனைவிட, கூடுதலாக சுமார் ரூ.4 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டிலேயே திமுக அரசின் கொள்ளை குறித்து ஆடியோவில் தெரிய வந்தது. ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு, சபரீசனும், உதயநிதியும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானது.
ஊழல் செய்வதைத் தவிர, தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. அரசின் பல்வேறு துறைகளில் அதிகளவில் ஊழல் செய்து, தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும், துறைவாரியாக எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதையும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஊழல் குறித்த புகார் பட்டியல், முழு விவரங்களையும் வழங்கி இருக்கிறோம். ஊழல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.















