
பெங்களூரு, ஜனவரி 14-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விபிஜி ராம்ஜி சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக ஏற்கனவே இருந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விபிஜி ராம்ஜி புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றவும் கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் 21ஆம் தேதி கர்நாடக மாநில சிறப்பு சட்டமன்ற கூட்டம் தொடங்குகிறது தொடர்ந்து 3 நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் விபிஜி ராம்ஜி சட்டம் குறித்து விவாதம் செய்யப்படுகிறது. மூன்று நாள் விவாதத்திற்கு பிறகு இந்த சட்டத்திற்கு எதிராக அதாவது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது. மீண்டும் மகாத்மா காந்தி பயலுடன் கூடிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுவரப்பட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கர்நாடக அரசு வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தது.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராம்ஜி சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும், இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம மற்றும் விபிஜி ராம்ஜி சட்டத்தின் நன்மை தீமைகள் குறித்து சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்ற விவாதங்கள் நடந்தன. அதன்படி, இன்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், ராம்ஜி சட்டம் குறித்து விவாதிக்க இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராம்ஜி சட்டத்தை செயல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, நாடு தழுவிய அளவில் இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடத் தயாராகி வருகிறது. மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ராம்ஜி சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்துள்ளது, மேலும் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வரவும் போராட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில்
முதல் நாளில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெறும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநரின் உரையுடன் கூட்டு அமர்வில் நடத்தப்பட வேண்டும். எனவே, விபிஜி ராம்ஜி சட்டம் குறித்த விவாதத்திற்காக அழைக்கப்பட்ட சிறப்பு அமர்வின் முதல் நாளில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் இரு அவைகளின் உறுப்பினர்களிடமும் உரையாற்றுவார். அவரது உரைக்குப் பிறகு, அவை ஜனவரி 22 வரை ஒத்திவைக்கப்படும். விபிஜி ராம்ஜி சட்டம் குறித்த விவாதம் மற்றும் கண்டனத் தீர்மானங்கள் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளான பிஜேபி ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் மோதல் இருக்கும் என்று கர்நாடக அரசியலில் இப்போதே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது














