தாக்கரே கோட்டையைத் தகர்த்து வரலாற்று வெற்றி பெற்ற பாஜக

மும்பை: ஜனவரி 17-
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் மொத்தம் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 5 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 15) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 கவுன்சிலர் இடங்களில் பாஜக 89; ஷிண்டே சிவசேனா 29; அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனா 65, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 1, காங்கிரஸ் 23, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களில் வென்றுள்ளன. மும்பை மாநகராட்சியை 28 ஆண்டுகளாக தாக்கரேவின் ஒருங்கிணைந்த சிவசேனா தமது கோட்டையாக வைத்திருந்தது. தற்போது சிவசேனா பிளவுபட்டதால் பாஜக கூட்டணி வசமாகிவிட்டது மும்பை மாநகராட்சி. தேர்தல் நடைபெற்ற மொத்தம் 2869 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக மட்டும் 1438-ல் வெற்றி பெற்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 405 இடங்களில், காங்கிரஸ் 318 இடங்களில், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 165, உத்தவ் தாக்கரே சிவசேனா 157 இடங்களில், ஓவைசியின் ஏ ஐ எம் ஐ எம் கட்சி 94 இடங்களிலும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 35 இடங்களிலும் வென்றுள்ளன.
மும்பை மாநகராட்சி: மும்பை மாநகராட்சியை பாஜக – சிவசேனா கூட்டணி கைப்பற்றுகிறது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக 89 வார்டுகளிலும், சிவசேனா 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இக்கூட்டணி 118 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 114 வார்டுகளின் வெற்றி தேவை எனும் நிலையில், இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 28 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவ சேனாவின் கட்டுப்பாட்டில் மும்பை மாநகராட்சி இருந்து வந்தது. ஏக்நாத் ஷிண்டேவால் ஏற்பட்ட பிளவை அடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரத்தில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 65 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு வார்டிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.