
புதுடில்லி: ஜனவரி 17-
நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி இடையேயான இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சிட்டிங் வகையிலான வந்தே பாரத் ரயில்களே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் RAC டிக்கெட் வசதி கிடையாது என்றும், இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.960 என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இன்று, ஜனவரி 17ஆம் தேதி படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஹவுரா முதல் அசாமின் கவுஹாத்தி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைக்க இருக்கிறார். அதிவேக பயணத்தை உறுதி செய்யும் வகையில், நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல், வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையொட்டி வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்கவும், படுக்கை வசதி கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்தவும் ரயில்வே வாரியம் திட்டமிட்டது.
அதன்படி தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பொதுவாக விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது RAC என்ற வசதி இருக்கும். இந்த RAC டிக்கெட் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டால், அந்த பயணிக்கு பகுதியளவு இருக்கையை உறுதி செய்யும். இந்நிலையில் இன்று அறிமுகப்படுத்தப்படும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் இந்த RAC வசதி கிடையாது என ரயில்வே தெரிவித்துள்ளது.
கவுகாத்தியில் இன்று மாலை போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாசார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதையடுத்து. நாளை காலை ரூ.6,950 கோடி மதிப்பிலான 86 கி.மீ. நீள கஜிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து, வட இந்திய மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.













