ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டு 21 பேர் பலி

மாட்ரிட்: ஜனவரி 19-
ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரயில் ஒன்றுடன் மற்றொன்று மோதி மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் சுமார் 100+ பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இக்கோர விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 100 பேர் காயமடைந்தனர். முதலில் 70 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியான நிலையில், பிறகு காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களில் பலர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. கோர்டோபா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், மாலகாவில் இருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரியோ நிறுவனத்தின் அதிவேக ரயிலுடன், மாட்ரிட்டில் இருந்து ஹூல்வா நோக்கிச் சென்ற ரென்ஃபே நிறுவனத்திற்குச் சொந்தமான ரயில் மோதியது. இந்த விபத்து காரணமாக மாட்ரிட் மற்றும் அண்டலூசியா இடையே அதிவேக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கோர்டோபாவில் இருந்து மாட்ரிட் புறப்பட்ட இரியோ ரயில் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி மாலை 6:40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரியோ 6189 மாலகா-மாட்ரிட் ரயில் அடாமுஸ் அருகே தடம் புரண்டு, அருகிலிருந்த மற்றொரு ரயில் பாதையில் நுழைந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக ஸ்பெயினின் ரயில் உள்கட்டமைப்பு மேலாண்மை நிறுவனமான “அடிஃப்” தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த மாட்ரிட்-ஹூல்வா அதிவேக ரயிலும் தடம் புரண்டது.
இதுவரை 21 பேர் உயிரிழந்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் குறைந்தது 25 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நகர்ப்புறத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததால், மீட்புப் பணிகள் சவாலாக அமைந்துள்ளது. தீயணைப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட அவசரக்காலச் சேவைப் படை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தது. சேதமடைந்த பெட்டிகளுக்குள் சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் பணிகள் இரவு முழுவதும் தொடர்ந்தன. இரியோ ரயில் பயணிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டதாக கோர்டோபா தீயணைப்புத் துறையின் தலைவர் பாக்கோ கார்மோனா தெரிவித்தார். ஆனால் ரென்ஃபே ரயில் பெட்டிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்த ரயிலில் இன்னும் பலர் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் முடிந்தால் மட்டுமே உயிரிழப்புகள் எவ்வளவு என்பது துல்லியமாகத் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார். விசித்திரமா இருக்கு இந்த ரயில் விபத்துக்கு அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவென்ட் இரங்கல் தெரிவித்துள்ளார் அதேநேரம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட தண்டவாளத்தின் நேரான பகுதியில் இந்த விபத்து நடந்ததாக புவென்ட் கூறினார். தடம் புரண்ட முதல் ரயில் புதிய ரயில் தான் என்றும் இந்த விபத்து மிகவும் விசித்திரமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.