
வாஷிங்டன்: ஜனவரி 19-
காசா – இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கான அமைதி வாரியத்தை ஏற்படுத்துவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளதாக கூறினார். டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் – காசா இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குவதும் என மத்திய கிழக்கில் ஒரே பதற்றமான பல ஆண்டுகளாக நிலவியது. இஸ்ரேல் ஹமாஸ் இந்த சூழலில்தான், கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் பிடித்து சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக்கூறி காசா மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
எனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து எகிப்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது இருதரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
20 அம்ச அமைதி திட்டம் ஆனால் ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய காசா, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு டிரம்பை வலியுறுத்தியது. இதையடுத்து, போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்டமாக காசா அமைதி வாரியத்தை அமைத்த டிரம்ப் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். இதன்மூலம் பாலஸ்தீனத்தை நிர்வகிக்கப் போவதாகவும் கூறி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், காசாவில் 20 அம்ச அமைதி திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு நுழைந்து விட்டோம். எனவே எகிப்து, துருக்கி, கத்தார் ஆதரவுடன் காசாவில் ஆயுத குறைப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதன்படி ஆயுத குறைப்பு, உயிரிழந்த பணய கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.














