நடுக்கடலில் கண்ணாமூச்சி ஆடும் அணு ஆயுத கப்பல்.. யாரை தாக்க திட்டம்?

நியூயார்க், ஜன. 21- அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரமடைந்த சூழலில், அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் (CVN-72) குழு மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது ஈரானை இந்த கப்பல் படை குழு நெருங்கி வருகிறது. மலாக்கா நீர்சந்தி வழியாக அரேபிய கடலை நோக்கிச் சென்ற இந்த போர்க்கப்பலின் அருகே, ஈரானிய சரக்கு கப்பல் அர்வின் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் USS ஆபிரகாம் லிங்கன் படைக்குழு கடலில் கண்ணாமூச்சி ஆடி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி அந்த அமெரிக்கக் கப்பல் தனது தானியங்கி அடையாள அமைப்பான (AIS) சிக்னலை நிறுத்தி உள்ளது. இது விவாதங்களுக்கு வழிவகுத்தது. கண்காணிப்பைத் தவிர்க்கவும், தயார்நிலையை உணர்த்தவும், ஆபத்தான பகுதிகளில் இது ஒரு பொதுவான ராணுவ நடைமுறையே என்றாலும் ஈரானை நெருங்கியதும் இந்த கப்பல் டிராக்கிங் சிஸ்டத்தை நிறுத்தி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நிலையில் கடும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. அணுசக்தி மூலம் இயங்கும் போர்க்கப்பல் அணுசக்தி மூலம் இயங்கும் இந்த சூப்பர் கேரியர், அண்மையில் தென் சீனக் கடலில் வழக்கமான பயிற்சிகளின் ஒரு பகுதியாக நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும் எரிபொருள் நிரப்பும் பயிற்சிகளை மேற்கொண்டது. இந்தோ-பசிபிக் பகுதியிலிருந்து மத்திய கிழக்குக்குச் சென்றுள்ளது இந்த கப்பல்.. ஈரான் எல்லை பகுதியை அடைய 2-3 நாட்கள்தான் ஆகும்.