
வாஷிங்டன், ஜன. 22- அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் ஏழாம் பொருத்தம் நீடித்து வருகிறது. இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து என்று வந்தால், இந்த பூமியில் ஈரான் என்கிற நாடு இருந்ததற்கான தடம் இன்றி அனைத்தும் அழிக்கப்படும் என, டிரம்ப் வார்னிங் கொடுத்திருக்கிறார். ஈரான் தலைவர்கள் தொடர்ந்து எனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும், இது தொடர்ந்தால் ஈரான் என்கிற நாடே இருக்காது எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ராணுவத்திற்கு அறிவுறுத்தல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “ஈரான் தலைவர்கள், என்னை குறி வைத்து தொடர்ந்து கொலை மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். அவர்கள் இதை செய்யக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக நான் தெளிவான அறிவுறுத்தல்களை எங்கள் ராணுவத்திற்கு கொடுத்திருக்கிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஈரான் முழுமையாக வெடித்து சிதறும். ஈரான் இந்த வேலையை தொடர்ந்து செய்கிறது எனில்.. உலக வரைபடத்திலிருந்து ஈரான் துடைத்தெறியப்படும்” என்று கூறியுள்ளார் டிரம்ப் மீது ஏன் தாக்குதல் கடந்த 2020ம் ஆண்டு, டிரம்ப் முதல் முறையாக பதவியேற்ற போது ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி ‘காசெம் சுலைமானி’ கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு பழி தீர்க்கவே தற்போது டிரம்ப் மீது, ஈரான் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது. இதனை அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் உறுதி செய்திருக்கிறார். மட்டுமல்லாது, டிரம்புக்கு எதிராக ஈரான் தீட்டும் சதி செயல்கள் குறித்து கடந்த 2024 தேர்தலின்போது, அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்திருந்தது. பைடன் மீது குற்றச்சாட்டு இந்த விஷயம் ஏற்கெனவே முன்னாள் அதிபர் பைடனுக்கு தெரியும் என்றும், இது குறித்து தனக்கு எச்சரித்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். ஒரு அதிபர் மற்று அதிபரை எச்சரிப்பது அவசியமானது. ஆனால், பைடன் இதை செய்யவில்லை என, டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈரான் பதிலடி இது இப்படி இருக்கையில், மறுபுறம் ஈரானில் அரசியல் நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஈரானில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துவதாகவும், மரண தண்டணை கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டங்களுக்கு பின்னால், அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாக ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

















