
நியூயார்க்: ஜனவரி 23-
ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல் படையான ‘ஆர்மடா’ (Armada) பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது
இந்த அதிரடித் தகவலை அவர் வெளியிட்டார்.
ஈரானில் சமீபத்தில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. “ஆர்மடா” – ஈரானை நிலைகுலையச் செய்யும் படை அமெரிக்க ஊடகங்களின் தகவல்படி, தென் சீனக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் அதன் போர்க்கப்பல் குழுக்கள் உடனடியாக மத்திய கிழக்கு நோக்கித் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளன. இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்: “நாங்கள் ஈரானைக் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பெரிய போர்க்கப்பல் படை (Armada) அந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது. எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எனது விருப்பம், ஆனால் ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிப்போம்,” என்று எச்சரித்தார்.
ஏற்கனவே புறப்பட்ட போர்க்கப்பல் அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரமடைந்த சூழலில், அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் (CVN-72) குழு மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது ஈரானை இந்த கப்பல் படை குழு நெருங்கி வருகிறது.
மலாக்கா நீர்சந்தி வழியாக அரேபிய கடலை நோக்கிச் சென்ற இந்த போர்க்கப்பலின் அருகே, ஈரானிய சரக்கு கப்பல் அர்வின் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் USS ஆபிரகாம் லிங்கன் படைக்குழு கடலில் கண்ணாமூச்சி ஆடி வருவதாக கூறப்படுகிறது.














