மோடி வருகை: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

சென்னை: ஜனவரி 23-
பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஎஸ்சி சாலையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசர கால ஊர்திகள் வழக்கம் போல அதே பாதையில் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகிறார் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு டிடிவி தினகரன், பாமக, ஓபிஎஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் பாமகவில் அன்புமணி, அமமுகவின் டிடிவி தினகரன் உள்ளிட்டோ தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளனர். பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒரே மேடையில் ஏற வைக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனால் மதுராந்தகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம் அதேபோல் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை – திண்டிவனம் ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதனால், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை-திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி-சென்னை மார்க்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. சென்னை டூ திண்டிவனம் சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காலை 07 மணி முதல் மாலை 07 மணி வரை சென்னை – திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்ட அறிவிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசர கால ஊர்திகள் வழக்கம் போலவே அதே பாதையில் செல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது.