சென்னை: ஜனவரி 23 –
பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின்கீழ் 18 புதிய சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புதிய செயல் திட்டத்தில், காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் அடையாளமானது ஆதார் வழிபெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லதுவிரல் ரேகை வழி சரிபார்க்கப்பட்டு ஆவணதாரர்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, ஆவணவிவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு மின்னணு ஆவணமாக இணையதளம் வழியாக பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இணையவழி ஆவணப் பதிவு அதேபோல, புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போதும், மனைப் பிரிவுகளில் இருந்து மனைகளை மட்டும் வாங்கும்போதும், மக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணப் பதிவுக்கு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். மேலும், அரசு வாரியங்களால் எழுதிக் கொடுக்கப்படும் சொத்துகளுக்கு சம்பந்தப்பட்ட வாரிய அலுவலகத்தில் இருந்தே பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்து, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை உடனே தரவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.














