
சியால்கோட், ஜன. 23- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் போலி ‘பிஸ்ஸா ஹட்’ கிளையைத் திறந்து வைத்த சம்பவம் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் ராணுவக் குடியிருப்பு பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு உணவகத்துக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற பிஸ்ஸா ஹட் நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த உணவகத்தின் திறப்பு விழா மிக விமரிசையாக நடைபெற்றது. மலர் அலங்காரங்கள், சிவப்புக் கம்பள வரவேற்பு என அமர்க்களப்பட்ட அந்த விழாவில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரிப்பனை வெட்டி உணவகத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திறப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதைப் பார்த்த பிஸ்ஸா ஹட் பாகிஸ்தான் நிறுவனம் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “சியால்கோட்டில் திறக்கப்பட்டுள்ள அந்த உணவகம் எங்களது அதிகாரப்பூர்வ கிளை அல்ல. அது போலியானது மற்றும் எங்கள் நிறுவன பெயர் தவறாகப் பயன்படுத்துகிறது. இதற்கும் பிஸ்ஸா ஹட் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி புகார் அளித்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கேலி இதனிடையே, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஒருவர், ஒரு உணவகத்தை திறந்து வைப்பதற்கு முன்பாக அது உண்மையானதா என்பதைக் கூட சரி பார்க்காதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளம் ஒன்றில், “ஒரு ரிப்பன் வெட்டு, ஒரு மறுப்பு அறிக்கை – இது ஒரு புதிய உலக சாதனை” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “பாதுகாப்பு அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நாடு” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.














