ஊழல் திமுக அரசுக்கு முடிவு

சென்னை: ஜனவரி 23 –
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேஜகூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் பா.ம.க (அன்புமணி தரப்பு), அ.ம.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை வந்த பிரதமர், மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் புறப்படுகிறார் அங்கு பொதுக்கூட்ட மேடையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர் சந்திக்கிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர், தனது உரையை முடித்துக் கொண்டு மாலை 4.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.01.2026 அன்று பாரத பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை திண்டிவனம் GST நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை GST சாலையில் சென்னை திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி சென்னை மாரக்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.