மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி, ஜன. 27- தேசிய கீதமான ‘ஜன கண மன’வை போல் வந்தே மாதரம் தேசிய பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது. காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான போராட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு எழுச்சி முழக்கமாக ‘வந்தேமாதரம்’ இருந்தது. இப்பாடல் கடந்த 1950 ஜன.24 முதல் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய கீதமான ஜன கண மன பாடுவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 52 நொடிகளுக்குள் இதை பாடி முடிக்க வேண்டும், தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் வந்தே மாதரம் தேசிய பாடலுக்கு இத்தகைய விதிகள் வகுக்கப்படவில்லை. இந்நிலையில் வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு நிறைவையொட்டி, தேசிய கீதத்திற்கு பொருந்தும் அதே நெறிமுறைகளை தேசியப் பாடலுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விதிகளை ‘வந்தே மாதரத்திற்கும்’ நீட்டிக்க முடியுமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.