
டெல்லி: ஜனவரி 27-
டெல்லியில் இன்று இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. 27 நாடுகள் கூட்டமைப்பை கொண்ட ஐரோப்பிய யூனியனுடன் இன்று கையெழுத்தாக உள்ள தடையற்ற ஒப்பந்தம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரியை விதித்துள்ளதால், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மாற்றுவழிகளை இந்தியா யோசித்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் இன்று பிரதமர் மோடி – ஐரோப்பிய யூனியன் தலைவர் இடையே நடைபெறும் உச்சி மாநாடு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இடையில் இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான் தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் நிறைவு பெறும் சூழலில் உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் இறக்குமதி வரியை 90 சதவீதத்துக்கு மேல் குறைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஜவுளி மற்றும் காலணி தயாரிப்பு துறையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும், வரிகள் குறைந்து விடும். சில பொருட்களுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, பருவநிலை மாற்றம், முக்கியமான டெக்னாலஜி துறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















