இஸ்லாமாபாத்:ஜனவரி 27-
அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தங்கள் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்ற காரணத்தால் தங்களுக்கான ஆட்டங்களை இலங்கையில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஐசிசி-யிடம் முறையிட்டது.
இந்த குற்றச்சாட்டை ஐசிசி மறுத்தது. தொடர்ந்து வங்கதேசத்தின் கோரிக்கை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அந்த அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் நின்றது. இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வங்கதேசத்துக்கு ஐசிசி கெடு விதித்தது. இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்த காரணத்தால் அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி இந்த தொடரில் விளையாடும் என ஐசிசி தெரிவித்தது.
இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தங்கள் நாட்டின் அரசே முடிவு செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி அண்மையில் தெரிவித்தார். இப்படி வங்கதேசத்துக்கு ஆதரவாக உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐசிசி கடும் எச்சரிக்கையை அனுப்பியிருந்தது.
இவ்வாறு செய்தால் கிரிக்கெட் உலகிலிருந்து பாகிஸ்தான் முழுமையாக தனிமைப்படுத்தப்படும் என்றும் ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் தங்கள் அணி வீரர்களை பாகிஸ்தான் அறிவித்தது.
இந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை திங்கட்கிழமை அன்று இஸ்லாமாபாத் நகரில் மோசின் நக்வி சந்தித்தார். அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மோசின் நக்வி பதிவிட்டார். “ஐசிசி விவகாரம் குறித்து பிரதமரை சந்தித்து, விரிவாக விளக்கினேன். அனைத்து ஆப்ஷன்களையும் கருத்தில் வைத்து இதில் இறுதி முடிவு எடுப்போம் என என்னிடம் தெரிவித்தார். வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அன்று இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என அதில் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் வெவ்வேறு ஆப்ஷன்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல். வங்கதேசத்துக்கு உதவும் வகையில் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவது அல்லது இந்தியாவுக்கு எதிராக பிப்.15-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தை மட்டும் புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தகவல்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கடைசியாக கடந்த 2012-13-ல் இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தன. அதன் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு காரணமாக ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்கின்றன. அதிலும் கடந்த ஆண்டு முதல் ஹைபிரிட் முறையில் ஐசிசி நடத்தும் தொடர்கள் இந்தியா, பாகிஸ்தானில் நடந்தால் அங்கு சென்று விளையாடாமல் இரு தரப்புக்கும் பொதுவானதாக உள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
















