
டெல்லி: ஜனவரி 27-
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூட இருக்கும் நிலையில், இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இது தவிர பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2026-2027 க்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 9-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தொடரை சுமூகமக நடத்துவதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்தக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் பிரதான கமிட்டி அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக அனைத்துக்கட்சியினரை அழைத்து பேசுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய கூட்டமும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் எழுப்பப்பட உள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாளை ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுகிறார். ஜனாதிபதி உரையில் அரசின் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்த பேச்சுக்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக பிப்ரவரி 2 முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் லோக்சபாவில் அலுவல் கூட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டதொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















