
தெஹ்ரான்: ஜனவரி 29-
அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஈரான் விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்று, டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனது கடற்படையை ஈரானுக்கு அருகில் நகர்த்தியுள்ளார். இப்படியிருக்கையில், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. பதில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய கவலை ஈரானின் அணுசக்தி வளர்ச்சிதான். ஈரான் தனது அணுசக்தி மையங்களில் யுரேனியத்தை ஆயுதம் தயாரிக்கும் அளவிற்குச் செறிவூட்டி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.
அமெரிக்கா கண்டனம் இதற்கிடையில் ஈரானில் தற்போது உள்நாட்டு நிலவரமும் மோசமடைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் முதல் ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வருகிறது. போர்க்கப்பல்கள் இந்நிலையில், நாங்கள் முன்மொழியும் அணுசக்தி ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானை டிரம்ப் மிரட்டி வருகிறார். ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு தாக்குதலைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார். வெறும் எச்சரிக்கையோடு நிற்காமல், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில், பல போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஈரான் கடல் பகுதியை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
டிரம்ப் வார்னிங் இது ‘வெனிசுலா’ விவகாரத்தின் போது அனுப்பப்பட்ட படையை விட பெரியது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை. பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், கடந்த ஆண்டு நடந்த ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் தாக்குதலை விட மிக மோசமான அழிவை ஈரான் சந்திக்கும் என்று ட்ரம்ப் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
ஈரானின் மிரட்டல் மட்டுமல்லாது கத்தார், துருக்கி, குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் அனைத்தும் ஈரானின் ஏவுகணை எல்லைக்குள் இருப்பதாக ஈரான் வரைபடத்துடன் எச்சரித்துள்ளது.
ஒருவேளை போர் ஏற்பட்டால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்றும் ஈரான் மிரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















