நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளர்ச்சி

புதுடெல்லி: ஜனவரி 30-
நடப்பு நிதி​யாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 7.4% வளரும் என்​று பொருளா​தார ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.
நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. வரும் பிப்​ர​வரி 1ம் தேதி வரும் 2026- 27 நிதியாண்டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்ய உள்​ளார். ஒவ்​வொரு ஆண்​டும் நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்​வதற்​காக, நாடாளுமன்​றத்​தில் பட்ஜெட் தாக்​கல் செய்​யப்​படு​வதற்கு முன்பு பொருளா​தார ஆய்வறிக்கையை மத்​திய அரசு தாக்​கல் செய்​வது வழக்​கம்.
இது பொருளா​தா​ரத்​தின் குறுகிய கால மற்​றும் நடுத்தர கால வாய்ப்​பு​கள் குறித்த கண்​ணோட்​டத்​தை​ வழங்​கும். அந்த வகையில், 2025- 26 நிதி​யாண்​டுக்​கான பொருளா​தார ஆய்வறிக்கையை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மக்களவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார்.
அதில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள் வரு​மாறு, தீவிரமடைந்து வரும் புவி​சார் அரசி​யல் பதற்​றம், வர்த்​தகப் போர் உள்​ளிட்ட காரணங்​களால் உலகளா​விய சூழல் தொடர்ந்து பலவீன​மாகவே உள்​ளது. இத்​தகைய பின்​னணி​யில், இந்​தி​யா​வின் செயல்​பாடு தனித்து நிற்​கிறது. நடப்பு 2025- 26 நிதி​யாண்​டில் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.4 சதவீத​மாக இருக்​கும் எனக் கணிக்​கப்​பட்​டுள்​ளது.
இது தொடர்ந்து நான்​காவது ஆண்​டாக இந்​தியா மிக வேக​மாக வளர்ந்து வரும் பெரிய பொருளா​தார நாடாக இருப்​பதை உறு​திப்​படுத்​துகிறது. இது​போல 2026- 27 நிதி​யாண்​டில் ஜிடிபி 6.8 முதல் 7.2% வளரும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.
விநி​யோகத்​தைப் பொறுத்​தவரை, சேவைத் துறை வளர்ச்​சி​யின் முக்​கிய உந்து சக்​தி​யாக நீடிக்​கிறது. இத்​துறை 9.1% வளர்ச்​சியை எட்​டும். மத்​திய அரசின் வரு​வாய் ஜிடிபி​யில் 9.2 சதவீத​மாக வலுவடைந்​துள்​ளது. நேரடி வரி செலுத்​து​வோர் எண்​ணிக்கை 2025 நிதி​யாண்​டில் 9.2 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. 2025 ஏப்​ரல் முதல் டிசம்​பர் வரை​யில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.17.4 லட்​சம் கோடியாக இருந்​தது.இது முந்​தைய ஆண்​டை​விட 6.7% அதி​கம். மத்​திய அரசின் மூலதன செல​வினம் 2025 நிதி​யாண்​டில் ஜிடிபி​யில் 4 சதவீத​மாக அதி​கரித்​துள்​ளது. அதிக அளவி​லான பொது முதலீடு​களை தொடர்ந்து மேற்​கொண்டு வந்​த​போ​தி​லும், இந்​தியா தனது கடன்​-ஜிடிபி விகிதத்தை 2020-லிருந்து சுமார் 7.1 சதவீதம் வரை குறைத்​துள்​ளது.
வங்​கித் துறை செயல்​பாடு​கள்: நாட்​டின் பணவியல் மற்​றும் நிதியியல் துறை 2026 நிதி​யாண்​டில் வலு​வான செயல்​பாட்டை வெளிப்​படுத்தி உள்​ளது. வணிக வங்​கி​களின் சொத்து தரம் முன்னேறி உள்​ளது. 2025 செப்​டம்​பர் நில​வரப்​படி, மொத்த வாராக் கடன் விகிதம் 2.2% ஆகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.5% ஆகவும் குறைந்​துள்​ளது. 2025 டிசம்​பர் நில​வரப்​படி, வங்​கி​களின் மொத்த கடன் வளர்ச்சி முந்​தைய ஆண்​டை​விட 14.5% அதி​கரித்​துள்​ளது.இது 2024-ல் 11.2% ஆக இருந்​தது.பிரதம மந்​திரி ஜன் தன் திட்​டத்​தின் கீழ் 2025 மார்ச் வரை 55.02 கோடி கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கு நிதி வழங்​கும் முத்ரா திட்​டத்​தின் கீழ் 55.45 கோடி பேருக்கு ரூ.36.18 லட்​சம் கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.2026 நிதி​யாண்​டில் (9 மாதங்​களில்) 2.35 கோடி புதிய டிமேட் கணக்கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் மொத்த டிமேட் கணக்கு எண்​ணிக்கை 21.6 கோடியைத் தாண்டி உள்​ளது. பரஸ்பர நிதி முதலீட்​டாளர்​கள் எண்​ணிக்கை 5.9 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இதில் 3.5 கோடி பேர் 2-ம் கட்ட நகரங்​களைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.