புதுடெல்லி: ஜனவரி 30-
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று கலந்துரையாடினார்.
மத்திய அரசு சார்பில் தலை நகர் டெல்லியில் வரும் பிப்ரவரி 19, 20ம் தேதிகளில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். உலகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஏஐ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி இந்தியாவை சேர்ந்த ஏஐ தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் நேற்று கலந்துரையாடினார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். சர்வதேச செயற்கை நுண்ணறிவு தளத்தில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்க வேண்டும். இதுதொடர்பான ஆராய்ச்சிகளில் இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
அதேநேரம் ஏஐ தொழில் நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். இந்த தொழில் நுட்பத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இந்திய இளைஞர்களுக்கு ஏஐ திறன் சார்ந்த பயிற்சி வழங்கப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஏஐ தொழில் நுட்பத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சென்னை ஐஐடி, ஹைதராபாத் ஐஐடி, மும்பை ஐஐடி கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஏஐ நிபுணர்கள், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல், சோஹோ உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஏஐ நிபுணர்கள் தங்களது கருத்துகளை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.

















