
காசியாபாத்: பிப்ரவரி 6-
குடும்பத்தை விட கொரியா மற்றும் அதன் கலாச்சாரத்தை தான் அதிகம் நேசித்தோம் என ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள் டைரியில் 8 பக்கத்துக்கு குறிப்பு எழுதி வைத்துள்ளனர்.
உத்தர பிரதேசம் காசியாபாத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகினர்.
இதிலிருந்து இவர்களை இவர்களது பெற்றோரால் மீட்க முடியவில்லை. இந்நிலையில் இவர்கள் 2 நாட்களுக்கு முன் தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி, அதில் இறுதியாக விடுக்கப்படும் சவால் அடிப்படையில் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. போலீஸ் விசாரணையில் சகோதரிகள் டைரியில் 8 பக்கத்துக்கு எழுதி வைத்த குறிப்பு கிடைத்துள்ளது.
அதில் சகோதரிகள் கூறியிருப்பதாவது: நாங்கள் கொரியாக்காரர்கள். எங்களுக்கு கொரியா பாப் இசைதான் பிடிக்கும். நீங்கள் இந்தியர்கள் உங்களுக்கு பாலிவுட்தான் பிடிக்கும்.
நாங்கள் கொரியாவை எங்கள் குடும்பத்தை விட அதிகம் நேசிக்கிறாம். எங்களுக்கு கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, லண்டன் மற்றும் ஜப்பான் நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான் பிடிக்கின்றன. எங்களுக்கு ‘டோபி ஸ்டுடியோ விளையாட்டு, ஈவில் நன் விளையாட்டு மற்றும் ஐஸ்கிரீம் மேன் ஆகிய விளையாட்டுகள்தான் பிடிக்கும். கொரியாக்காரர்கள் மற்றும் கொரியா பாப் இசை தான் எங்கள் வாழ்க்கை. நாங்கள் எங்கள் சகோதரனுக்கும் கொரியா கதாபாத்திரங்களான லெனோ மற்றும் குயினா பற்றி எடுத்துக்கூறினோம்.
ஆனால் அம்மா, அவனுக்கு கொரியா கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் என்பார். இது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. இதனால் நாங்கள் எங்கள் சகோதரனை எதிரியாக கருதினோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்

















