
புதுடெல்லி, பிப். 11- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த செய்த நமீபியா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்தார். ஜேன் ஃபிரைலிங்க் 30, ஜே ஜே ஸ்மித் 22, கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 18 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை. நெதர்லாந்து அணி தரப்பில் ஆல்ரவுண்டரான பாஸ் டி லீ 3 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை வீழ்த்தினார். லோகன் வான் பீக் 3 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 157 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து அணி பவர்பிளேவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 50 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான மேக்ஸ் ஓ’டவுட் 7 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் லெவிட் 15 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பாஸ் டி லீ அதிரடியாக விளையாடினார்.மட்டையை சுழற்றிய அவர், 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 5-வது அரை சதத்தை விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய காலின் ஆக்கர்மான் 28 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீயுடன் இணைந்து மட்டையை சுழற்றினார். இதனால் நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாஸ் டி லீ 48 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 9 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் வெற்றியை கோட்டை விட்டிருந்தது. நெதர்லாந்து அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வரும் 13-ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதேவேளையில் நமீபியா தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (12-ம் தேதி) இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.




















