திருப்பதி: பிப்ரவரி 11-
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பது தெரியவந்தது. கழிவறையை கழுவ பயன்படுத்தப்படும் ஒருவித ரசாயனம் கலக்கப்பட்டதாகவும் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெரிய ஜீயரான மடாதிபதி சடகோபன் ராமானுஜர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோடிக்கணக்கான பக்தர்கள் மிகவும் நம்பிக்கையுடன் சுவீகரிக்கும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்திய நெய்யில் கலப்படம் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை குழு உறுதிப்படுத்தியது என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. தினமும் சுவாமிக்கு பூஜை செய்து நைவேத்தியம் படைக்கும் எனக்கு இது ஒரு மகாபாவம் என்று மனதில் படுகிறது.கலப்படம் நடந்தது தெரிந்தே கடந்த ஆட்சியினர் அந்த நெய்யை சுவாமியின் பிரசாதத்தில் கலந்தது மிகப்பெரிய பாவச்செயல்.
இது தர்மத்துக்கு எதிரானது. மிகவும் நம்பிக்கையுடன் திருமலைக்கு வந்து லட்டு பிரசாதத்தை வாங்கி அதனை சாப்பிட்ட பக்தர்களின் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என நினைத்து கவலைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.















