
இஸ்லாமாபாத்:பிப்ரவரி 11- அமெரிக்காவும், பாகிஸ்தானும் நெருக்கமாக உள்ளன. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்கா தங்களின் தேவைக்காக பாகிஸ்தானை பயன்படுத்துகிறது. டாய்லெட் பேப்பரை விட மோசமாக பாகிஸ்தானை பயன்படுத்தி எறிந்துவிட்டது என்று நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் போர் நடந்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. இதில் பயந்துபோன பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதனை நம் நாடு ஏற்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் டிரம்ப் தான் போரை நிறுத்தினார்.. அவர் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும். இதனால் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று கூறி வருகிறார். இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு அமெரிக்கா, பாகிஸ்தானை தங்கள் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டு டாய்லெட் பேப்பரை விட மோசமாக தூக்கி எறிந்துவிட்டது என்று அவர் சாடியுள்ளார். அமெரிக்காவை நம்பி மோசம் போய்விட்டோம் என்று புலம்பி தள்ளினார். இதுதொடர்பாக கவாஜா ஆசிப் பேசியதாவது: 1999ம் ஆண்டுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் போரில் பாகிஸ்தான் மீண்டும் தலையிட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் உதவியை நாடியது பெரிய ஆபத்தாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய தவறு. இந்த தவறின் நீண்ட கால விளைவுகளை பாகிஸ்தான் இன்றும் கூட முழுமையாக அனுபவித்து வருகிறது.


















