அமராவதிக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை

அமராவதி: பிப்ரவரி 11-
ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு சென்று பல மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை எடுத்துக் கூறினார். நேற்று காலை முதலில் அவர் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்தார். அப்போது, ஆந்திராவையொட்டி செல்லும் 3 அதிவேக ரயில்வே காரிடார்களை அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்தார்.
மேலும், சென்னை – பெங்களூரு அதிவேக ரயில், திருப்பதிக்கு வந்து செல்லும் படியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார். இதனை தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். விவசாயத்தில் ரசாயனம் உபயோகப்படுத்துவதை நிறுத்தியதற்கான மானியத்தை வழங்கிட வேண்டும் என்றும், இதற்காக 2024- 25 ஆண்டுக்கு ரூ.216 கோடி ஆந்திராவுக்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். அப்போது, ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு குறித்து இருவரும் பேசினர். ஏற்கெனவே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் நாடாளுமன்ற 2-வது கூட்டத் தொடரில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். அப்போது ஆந்திராவுக்கு வர வேண்டிய நிதி, பல்வேறு திட்டங்களுக்கான அனுமதிகள் போன்றவை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்புகளின்போது, சந்திரபாபு நாயுடுவுடன், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு, சந்திரசேகர், கேஷவ், ஆந்திர எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.