
கனடா: பிப்ரவரி 11-
கனடாவில் வேலை பார்க்கும் தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் கனடாவில் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.எனவே பிரிந்து வாழும் 31 வயது கணவர், 24 வயது மனைவி விவாகரத்து கேட்டு தானே குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 2 பேரும் வெளிநாட்டில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழக்கு மீதான விசாரணை நடந்தது 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.இதையடுத்து கோர்ட்டு தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதிஆர்.எஸ்.பகரே அவரது தீர்ப்பில், “பயிற்சி பெற்ற மத்தியஸ்தரால் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தம்பதி இணைந்து வாழ ஆர்வம் காட்டவில்லை.மனுதாரர்கள் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால, எதிர்கால பிரச்சனைகள் குறித்து பரஸ்பரம் தீர்வு கண்டுள்ளனர்அவர்களுக்கு இடையேயான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது.இந்தநிலையில் குடும்ப நல கோர்ட்டு வெளிநாட்டில் வாழும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


















