
மும்பை, பிப். 12- சாலையில் விபத்துகளை தவிர்க்கவும், சாலை பயணத்தை இனிமையாக்கவும் ‘இசை சாலை’ அமைக்கப்படுவது வெளிநாடுகளில் பொதுவான அம்சமாகும்.
அந்த வகையில் இந்தியாவில் முதன்முறையில் மும்பையில் இசை சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. நாரிமன் பாயிண்ட் முதல் வொர்லி வரை செல்லும் வடக்கு நோக்கிய சாலையில் இந்த இசை சாலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வொர்லி சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்தவுடன் வலதுபுறம் உள்ள முதல் டிராக்கில் 500 மீ தூரத்திற்கு இந்த இசை சாலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இந்த சாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் பயணித்தால் ‘ஜெய் ஹோ’ எனும் பாடல் ஒலிப்பதை கேட்க முடியும். இந்த பள்ளங்கள் ‘ரம்ப்ல் ஸ்ட்ரிப்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளிலும் துல்லியமான அளவுகளிலும் இவை அமைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில், சுரங்கப்பாதைக்குள் 500, 100, 60 மீட்டர் தூரத்தில் அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இசை சாலை எப்படி வேலை செய்கிறது? சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் பள்ளங்கள் மற்றும் மேடுகள் செதுக்கப்படுகின்றன. கார் இந்த பாதை வழியாக பயணிக்கும்போது, அதன் டயர்கள் இந்த மேடு பள்ளங்கள் மீது மோதி அதிர்வடைந்து ஒலியை உருவாக்குகிறது. இசையை பொறுத்தவரை ஒவ்வொரு சுருதிக்கும் ஒரு அதிர்வெண் இருக்கிறது. பள்ளங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால், டயர்கள் வேகமாக அதிர்வடைந்து உயர்ந்த சுருதி கொண்ட சத்தம் வரும்.அதுவே பள்ளங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தால், குறைந்த சுருதி கொண்ட சத்தம் வரும். இப்படித்தான் இசை உருவாக்கப்படுகிறது. இந்த மேடு பள்ளங்களை சரியான இடைவெளியில் அமைப்பதன் மூலம் குறிப்பிட்ட வேகத்தில் இதன் மீது டயர்கள் உரசினால், இசை ஒன்றாக சேர்ந்து பாடலாக கேட்கும். இதில் முக்கியமான அம்சமே வேகம்தான். குறைந்த வேகத்தில் போனால், பாடலை சரியாக கேட்க முடியாது.
















