
புதுடெல்லி, பிப். 12- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டியான நமீபியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றம் அளித்த நிலையில் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி 49 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும். இது ஒருபுறம் இருக்க தொடக்க வீரரான அபிஷேக் சர்மா வயிற்று தொற்று மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர், மருத்துவமனையில் இருந்து திரும்பினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவது சந்தேகம்தான். ஏனெனில் பாகிஸ்தான் போட்டியை கருத்தில் கொண்டு அபிஷேக் சர்மாவுக்கு போதிய ஓய்வு கொடுக்கப்படக்கூடும். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படக்கூடும். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர், உயர்மட் செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் துபே உள்ளிட்டோர் பொறுப்புடன் விளையாடுவதில் கவனம் செலுத்தக்கூடும். இந்திய அணி அடுத்ததாக வரும் 15-ம் தேதி பாகிஸ்தானுடன் மோத உள்ளது. இதனால் அந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இன்றைய ஆட்டத்தை இந்திய அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். பந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். இவர்கள் நமீபியா அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடும்.இன்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தியின் சுழல், நமீபியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். நமீபியா தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் முதல் 6 இடத்தில் களமிறங்கும் வீரர்களில் ஜேஜே ஸ்மித்தின் ஸ்டிரைக் மட்டுமே 140 ஆக உள்ளது. மற்ற 5 வீரர்களின் ஸ்டிரைக் ரேட் இன்றைய கால டி20 பேட்டிங் வரிசைக்கு தகுந்த வகையில் இல்லை.




















