
பல்லேகலே, பிப். 13- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை – ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கமில் மிஷாரா 8 ரன்னில் ஜெய் ஒடெட்ரா பந்திலும், பதும் நிசங்கா 13 ரன்னில் சூஃப்யான் மெஹ்மூத் பந்திலும் நடையை கட்டினர். இதையடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குஷால் மெண்டிஸுடன் இணைந்த பவன் ரத்னாயகே அதிரடியாக விளையாடினார். பவன் ரத்னாயகே தனது முதல் அரை சதத்தை 24 பந்துகளிலும், குஷால் மெண்டிஸ் தனது 19-வது அரை சதத்தை 39 பந்துகளிலும் கடந்தனர். 50 பந்துகளில், 94 ரன்கள் குவித்த இந்த ஜோடியை சூஃப்யான் மெஹ்மூத் பிரித்தார். பவன் ரத்னாயகே 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஜிதேன் ராமானந்தி பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து களமிங்கிய கேப்டன் தசன் ஷனகா, ஓமன் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி 19 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி 20 அரங்கில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார் தசன் ஷனகா. இதற்கு முன்னர் அவர், கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரின் ஆட்டத்தில் 20 பந்துகளில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை தற்போது அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ஓமன் அணிக்கு எதிராக சாதனை அரை சதம் விளாசிய அடுத்த பந்திலேயே தசன் ஷனகா ஆட்டமிழந்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட தசன் ஷனகா 5 சிக்ஸர்கள, 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். நிதானமாக விளையாடிய குஷால் மெண்டிஸ் 45 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதிக் கட்ட ஓவர்களில் கமிந்து மெண்டிஸ் 7 பந்துகளில், 19 ரன்களும், துனித் வெல்லாலகே 4 பந்துகளில், 6 ரன்களும் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் ஜிதேன் ராமானந்தி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 226 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



















