
புதுடெல்லி, பிப். 13- ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் 8 முக்கிய அம்சங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரூ.45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ25,060 கோடியும், கடன் உத்தரவாத திட்டத்துக்கு ரூ.20,000 கோடியும் ஒதுக்கப்பட்டன. இருமுனை திட்டங்கள்: இந்த ஏற்றுமதி ஊக்குவிப்பு, ‘நிர்யாத் புரோத்சாகன்’ (நிதி சார்ந்த உதவிகள்) மற்றும் ‘நிர்யாத் திஷா’ (நிதி சாராத உதவிகள்) என இரண்டு துணைத் திட்டங்களின் கீழ் செயல்படவுள்ளது. நிர்யாத் புரோத்சாகன் திட்டத்தின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடன்களுக்கான வட்டி மானியம், இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் அட்டைகள் மற்றும் புதிய சந்தைகளுக்கான கடன் மேம்பாட்டு வசதிகளும் இதில் அடங்கும். நிர்யாத் திஷா திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பொருட்களின் தரம், பேக்கேஜிங், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பு மற்றும் தொலைதூர மாவட்ட ஏற்றுமதியாளர்களுக்கான போக்குவரத்து மானியம் ஆகியவற்றுக்கு இத்திட்டம் உதவும். மத்திய அரசு ஏற்கெனவே கடந்த டிசம்பரில் ரூ.4,531 கோடி மதிப்பிலான சந்தை அணுகல் திட்டத்தையும், ஜனவரி மாதம் ரூ.7,295 கோடி மதிப்பிலான ஏற்றுமதி கடன் தொகுப்பையும் அறிவித்திருந்தது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2025 முதல் 2031 வரையிலான ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளன. இது குறித்து வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில், “ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்தின் 8 முக்கிய அம்சங்களைத் தொடங்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். குறிப்பாக, இ-காமர்ஸ் மற்றும் சரக்கு கிடங்கு வசதிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றார்.
















