
புதுடெல்லி: பிப்ரவரி 13-
இந்தியாவில் தனது வர்த்தகத்தை ரோல்ஸ் – ராய்ஸ் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, போர் விமானங்களுக்கான இன்ஜின்களை அந்த நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி துஃபான் எர்கின்பில்கிக், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நேற்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் நிலம், வான்வெளி, கடல்சார் பாதுகாப்புத் துறைகளில் ரோல்ஸ்-ராய்ஸ் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த பிரம்மாண்ட திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் அடுத்த தலைமுறைப் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை உள்நாட்டிலேயே கூட்டாக சேர்ந்து தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 10,000-ஆக அதிகரிக்கப்பட உள்ளது.மேலும், இந்திய விநியோகச் சங்கிலி மூலம் மேற்கொள்ளப்படும் கொள்முதலை 10 மடங்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியாவை தனது மூன்றாவது பெரிய சந்தையாக மாற்ற ரோல்ஸ்-ராய்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















