
புதுடெல்லி: பிப்ரவரி 13-
அமெரிக்க பருத்தி மற்றும் நூலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜவுளிக்கு வங்கதேசம் பெறும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் இந்தியா ஒட்டுமொத்தமாக சரணடைந்துள்ளது, விவசாயிகளின் நலன்கள் விஷயத்தில் இந்தியா சமரசரம் செய்துள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேசப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை 19 சதவீதமாக அமெரிக்கா குறைக்கிறது. ஆனால், அமெரிக்க பருத்தி மற்றும் நூலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு மட்டும் அமெரிக்கா பரஸ்பர வரியில் முழு விலக்கு அளிக்கிறது.வங்கதேச ஆடைக்கு அமெரிக்காவில் 31 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க பருத்தி மற்றும் நூலில் ஆடைகளை தயாரித்து அனுப்பினால் 19 சதவீத பரஸ்பர வரியில் விலக்கு அளிக்கப்பட்டு, நட்பு நாடுகளுக்கு விதிக்கப்படும் 12 சதவீத வரிமட்டுமே விதிக்கப்படும்.ஜவுளியை பொருத்தவரை வங்கதேசத்துக்கு அமெரிக்கா வழங்கும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும். இந்திய நிறுவனமும் அமெரிக்க பருத்தி மற்றும் நூலில் ஆடை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால், பரஸ்பர வரி விதிக்கப்படாது. அமெரிக்கா – வங்கதேச வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறை, இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திலும் இருக்கும்.
இதனால் இந்தியாவில் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமெரிக்காவில் குறிப்பிட்ட அளவுதான் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் ஏற்றுமதி 5 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனால்
இந்தியாவுக்கு இதன் இலக்கு 50 பில்லியன் டாலர். வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இந்தியாவும் – அமெரிக்காவும் இறுதி செய்துள்ளன. இது மார்ச் மாதம் அமல்படுத்தப்படலாம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

















