
அகமதாபாத்: பிப்ரவரி 13-
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் கொரியர் டெல்லா செரா நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த விபத்து தற்செயலானது அல்ல திட்டமிட்ட செயல் என தெரிய வந்துள்ளது.
விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மேனுவலாக ‘ஆஃப்’ செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இது இயந்திரக் கோளாறல்ல என்றும், மனித தலையீட்டால்தான் இந்த விபத்து நிகழ்ந்தது என்றும் அமெரிக்க நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வாறு அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானி சுமித் சபர்வால் எரிபொருள் சுவிட்சுகளை அணைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கை கூறுகிறது.
இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை பிரிவு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், “காக்பிட் உரையாடல்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதில், ஒரு விமானி “ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?” எனக் கேட்க, மற்றொருவர் “நான் அவ்வாறு செய்யவில்லை” என்று பதிலளிப்பது பதிவாகியிருந்தது. இந்தியா நிராகரிப்பு: விமான விபத்து புலானாய்வு அமைப்பு (ஏஏஐபி) கூறுகையில், “இத்தாலி ஊடகத்தின் கருத்துகள் தவறு. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சரிபார்க்கப்படாத இந்த செய்தி பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதுடன் விசாரணையின் நேர்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளது.















