
புதுடெல்லி: பிப்ரவரி 13
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பேசும்போது, “அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா பணிந்துவிட்டது. நமது தரவுகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டது. தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” என கடுமையாக சாடினார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ‘சப்ஸ்டான்டிவ் மோஷன்’ எனப்படும் ஒரு முக்கியத் தீர்மானத்துக்கான நோட்டீஸை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர் ஆயுட் காலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நிஷிகாந்த் துபே கூறியதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார். அப்போது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் யுஎஸ்ஏஐடி போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார். ராகுலின் செயல்பாடுகள் உள்நாட்டில் இருந்தே இந்தியாவை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.
அவர் வெளிநாட்டு சக்திகளின் ஒரு கருவியாகச் செயல்படுகிறார். ராகுல் காந்திக்கு நிதி அளிப்பது யார் ? முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத புத்தகம் அவருக்கு எப்படி கிடைத்தது ? இது சாதாரண உரிமை மீறல் தீர்மானம் அல்ல. ராகுல் காந்தியின் ஒட்டுமொத்த நடத்தை மற்றும் தேச நலனுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி கூறும்போது, “நிஷிகாந்த் துபே மத்திய அமைச்சராக விரும்புகிறார், அதற்காகவே ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யத் துடிக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்மற்றொரு மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “பாஜகவின் இரட்டை நிலையை இது காட்டுகிறது. ராகுல் காந்தியின் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன. ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதேபோன்ற கருத்துகள் அனுமதிக்கப்படுகின்றன. மக்கள் ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்துள்ளனர், நாங்கள் இதுபோன்ற நோட்டீஸ்களைக் கண்டு அஞ்சமாட்டோம்” என்றார்.கடந்த காலங்களில், மக்களவையில் எதிர்க்கட்சிகள் ‘சப்ஸ்டான்டிவ் மோஷன்’ எனப்படும் தீர்மானத்தைப் பயன்படுத்துவது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்துள்ளது. 1997ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா, உ.பி.யின் அரசியல் சூழல் மற்றும் அப்போதைய ஆளுநர் ரமேஷ் பண்டாரியின் செயல்பாடுகள் குறித்து பாஜக கொண்டு வந்த சப்ஸ்டான்டிவ் மோஷனை அனுமதித்தார்.அந்தத் தீர்மானம் ஆளுநரைத் திரும்பப் பெறக் கொண்டு வரப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சபையில் முன்மொழியப்பட்டால், கட்டாயம் விவாதம் நடத்தப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதும் அவசியமாகும்.

















