
புதுடெல்லி: பிப்ரவரி 13
நடிகர் மனோஜ் பாஜ் பாய் நடித்து, நீரஜ் பாண்டே இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள திரைப்படம் குஷ்கோர் பண்டத். இதற்கு ஊழல் பண்டிட் என அர்த்தம்.
இத்திரைப்படத்தின் தலைப்பு பிராமண சமூகத்தை இழிவுபடுத்துவதாக அதுல் மிஷ்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு விசாரித்தது.மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இதுபோன்ற தலைப்பை திரைப்படத்திற்கு வைத்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஏன் இழிவுபடுத்த வேண்டும் ? இதை அனுமதிக்க முடியாது” என்றனர்.தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

















