
புதுடெல்லி, பிப். 14- ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்ஷ் தாகர் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். நவ்னீத் தாலிவால் 34, ஸ்ரேயஸ் மோவா 21, கேப்டன் தில்பிரீத் பஜ்வா 11 ரன்கள் சேர்த்தனர். ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் ஜூனைத் சித்திக் 4 ஓவர்களை வீசி 35 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். 151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 12.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து தடுமாறியது. அந்த சூழ்நிலையில் ஆர்யன்ஷ் சர்மா, சோஹைப் கான் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். கடைசி 4 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவையாக இருந்தன. டிலன் ஹெய்லிகர் வீசிய 17-வது ஓவரில் 17 ரன்களும், ஜஸ்கரன் சிங் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்களும், கலீம் சனா வீசிய 19-வது ஓவரில் 18 ரன்களையும் ஆர்யன்ஷ் சர்மா, சோஹைப் கான் ஜோடி விளாசி மிரட்டியது. இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஆர்யன்ஷ் சர்மா 53 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் சோஹைப் கான் 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். முன்னதாக கேப்டன் முகமது வசீம் 4, அலிஷான் ஷராஃபு 5, மயங்க் குமார் 4, ஹர்ஷித் கவுசிக் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்திருந்தது. அதேவேளையில் கனடா அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்திருந்தது.




















