
சென்னை: பிப்ரவரி 14-
இந்திய ரிசர்வ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் முறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் போது வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதை தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது…. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.. பொதுவாக வங்கிகளிடம் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடன் வசூல் முகவர்கள் மிக மோசமாக நடத்துவதாகவும், அநாகரிகமான முறையில் மிரட்டுவதாகவும் நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன..
அதனால்தான் இந்த புகார்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க ரிசர்வ் வங்கி முயன்றுள்ளது.. இதற்காக புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.. இந்த வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. கடன் வசூல் முறைகள் இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், கடன் வசூல் செய்யும் முகவர்கள் இனி தங்களுக்கு தோன்றிய நேரத்தில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முடியாது. குறிப்பாக காலை எட்டு மணிக்கு முன்பாகவும், மாலை 7 மணிக்கு பின்பாகவும் வாடிக்கையாளர்களை போனில் அழைப்பதற்கோ அல்லது அவர்களை நேரில் சந்திப்பதற்கோ ரிசர்வ் வங்கி முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட நேரத்தையும் அமைதியையும் உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் பொருட்டு, கடன் வசூல் முகவர்களால் வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் வங்கிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

















