
சென்னை: பிப்ரவரி 14-
பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் காகங்களோ அல்லது இதர பறவைகளோ மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக அது குறித்து அருகில் உள்ள கால்நடைத் துறைக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான பீகார் மற்றும் கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாகப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன.
குறிப்பாகக் கர்நாடகாவில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு ஏவியன் இன்ஃப்ளூயன்சா எனப்படும் பறவைக் காய்ச்சல் (H5N1) இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வைரஸ் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பறவை காய்ச்சல் இந்தச் சூழலில், சென்னையின் முக்கியப் பகுதிகளான அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் போன்ற இடங்களில் கடந்த சில நாட்களாகக் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் திடீரென மடிந்து கிடந்தது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர் அந்த காகங்களின் மாதிரிகளைச் சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பி வைத்தனர்.
2 நாட்களுக்கு முன்பு அதன் முடிவுகள் வெளியாகியன. அதில் சென்னை அடையார் பகுதியில் உயிரிழந்த காகங்களுக்கு H5N1 வகை ஏவியன் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் என்பதால், கோழிகள் மற்றும் வீட்டுப் பறவைகளுக்குத் தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பறவைகள் மூலம் சில அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. குறிப்பாகப் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக சுகாதாரத்துறை பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஆனால் அதே சமயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைச்சியைத் தகுந்த வெப்பநிலையில் நன்கு வேகவைத்துச் சமைப்பதன் மூலம் வைரஸ் தொற்று அபாயத்தைத் தவிர்க்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

















