விமானம் தரையிறங்கும் சாலை

புதுடெல்லி: பிப்ரவரி 14-
வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் பகுதி அசாமின் மோரான் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக தரையிறங்கி இந்த வசதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். ரூ.5,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.
முன்னதாக மோடி, சாபுவா விமானநிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை அசாம் ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த
சோனோவால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சாபுவாவிலிருந்து, திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மோரன் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவசர தரையிறங்கும் வசதிக்குச் செல்ல இந்திய விமானப்படையின்
C-130J விமானத்தில் பிரதமர் ஏறினார்.ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட 4.2 கிமீ நீள வசதியில் அவர் தரையிறங்கினார். வடகிழக்கு பிராந்தியத்தில் இதுபோன்ற உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறங்குதளம் 4.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. தேசிய அவசர காலங்களில் இது பயன்படும். மனிதாபிமானப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை பேரிடர்கள் போன்ற காலங்களில் அவசர தேவைகளுக்கு இதை பயன்படுத்தும். அது மட்டும் இன்றி, ராணுவ விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களும் இதை பயன்படுத்தலாம். இது மாற்று ஓடுபாதையாகச் செயல்படும். பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ள இந்த சாலை, “சீனாவின் எல்லையில் இருந்து 300 கி.மீ., மியான்மரில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் உள்ளன. பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இதன்மூலம் நாட்டின் பாதுகாப்புத் திறன் வலுவடையும். இப்பகுதிக்கு இது கூடுதல் பாதுகாப்பு திறனை வழங்கும்.
போர் விமானங்களை சாலையில் இறக்கும் சோதனை ஓட்டம் புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றன. உள்ளூர் மக்கள் பெருமளவில் திரண்டு இந்த சோதனை ஓட்டத்தை பார்த்தனர். கடந்த 2021 நவம்பரில் பிரதமர் மோடி ஒரு இதே போன்ற ஒரு சாலையை திறந்து வைத்தார். உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் அந்த அவசரகால தளம் உள்ளது. சீனாவுக்கு இந்தியா வைக்கும் செக் இந்த புதிய விமான இறங்குதளம் நாட்டின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும். அவசர காலச் சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவும். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானது. பாதுகாப்புத் திட்டங்களில் மிக முக்கிய படிநிலையாகும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய சீனா, எல்லையில் அவ்வப்போது இந்தியாவுடன் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அருணாசலபிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடும் சீனா, அடாவடியாக எல்லையில் கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது. எளிதில் தடவாளங்களை எடுத்துச் செல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக எல்லையோரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, குடியிருப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு தக்க பதிலடிகொடுக்கும் விதமாக இந்தியாவின் இந்தநெடுஞ்சலை அமைய உள்ளது. போர் பதற்றம் மற்றும் அவசர காலங்களில் எளிதில் தடவாளங்களை எடுத்து செல்லவும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லம் முடியும். அதேபோல, மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியிலும் இந்த சாலை வருவதால் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த நெடுஞ்சாலை இருக்கும்.