திருமாவளவன் பேட்டி

சென்னை: மார்ச் 2-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக – திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விசிக தலைவர் திருமாவளவன், விசிக எம்.பி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோரும் அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுகவுடன் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பயணித்து வருகிறது. அந்த கட்சியையும் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
மற்ற கட்சிகளுடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த வாரத்திற்குள் அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக விசிக இல்லை என கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை திமுக குழுவிடம் தெரிவித்துள்ளோம். சட்டமன்ற தேர்தலில் வலதுசாரி கட்சிகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும். விசிகவுக்கான பகிர்வு என்பது வலிமைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை. எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் மோடியின் அரசியல் எடுபடாது. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்ப தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். புதுச்சேரியில் 1 பொது, 2 தனித் தொகுதிகள் என 3 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தையில் எத்தனை இழுபறிகள் இருந்தாலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் நீடிக்கும். திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணியாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.