
வாஷிங்டன்: மார்ச் 2-
ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய ராணுவ நிலவரத்தைக் கணக்கில் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய ட்ரம்ப், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை எனினும் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, “அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள், ஆனால் கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும்” என்று பதிலளித்த அவர், தற்போதைக்குத் தாக்குதல்கள் தொடரும் என்று உறுதிபட தெரிவித்தார்.
அணு ஆயுதம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டுள்ள ஈரான், நாகரிக உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் என்பதால் இந்தத் தாக்குதல் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், அமெரிக்கப் படைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஈரானிய மக்கள் ஆட்சி நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஈரானின் ஐஆர்ஜிசி, ராணுவம், காவல் துறையை சேர்ந்த வீரர்கள் போரிட விரும்பவில்லை. அவர்கள் ஈரானின் தேசப்பற்றாளர்களுடன் இணைவார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஈரானின் தீய சக்திகள் மீது அமெரிக்காவின் துல்லிய தாக்குதல் தொடரும். இந்த தாக்குதல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். ஒரு வாரத்தையும் தாண்டி செல்ல வாய்ப்பு இருக்கிறது. எங்களது குறிக்கோள் நிறைவேறும்வரை தாக்குதல் தொடரும். இதன்மூலம் மத்திய கிழக்கு முழுவதும் அமைதி திரும்பும். மத்திய கிழக்கு மட்டுமன்றி உலகம் முழுவதுமே அமைதி திரும்பும். பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் இப்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முந்தைய தாக்குதல் களைவிட அதிதீவிரமாக தாக்குதல் நடத்துவோம் என்கின்றனர். அவ்வாறு பதில் தாக்குதல் நடத்தாமல் இருப்பது ஈரான் ஆட்சியாளர்களுக்கு நல்லது. ஒருவேளை அவர்கள் தாக்குதல் நடத்தினால் நாங்களும் தாக்குதல் நடத்துவோம். எங்களது தாக்குதல், உலகம் இதுவரை காணாத வகையில் அதிதீவிர தாக்குதலாக இருக்கும். இதை ஈரான் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















