
கொல்கத்தா, மார்ச் 3- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளாசிய 97 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 196 ரன்கள் இலக்கை 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி கண்டது. சூர்யகுமார் யாதவ் (18), திலக் வர்மா (27), ஷிவம் துபே (8) ஆகியோரும் வெற்றிக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறியதாவது: ஒவ்வொரு பங்களிப்பைப் பற்றியும் நீங்கள் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது, ஏனென்றால் பல ஆண்டுகளாக, நாம் ஒரு சில பங்களிப்புகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, இது எப்போதும் குழு விளையாட்டாகவே இருக்கும். என்னை பொறுத்தவரையில் ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகளும் சஞ்சு சாம்சன் குவித்த 97 ரன்களைப் போலவே முக்கியம். ஏனென்றால் ஷிவம் துபே அந்த இரண்டு பவுண்டரிகளையும் அடிக்கவில்லை என்றால், சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்தது குறித்து பேசவே மாட்டீர்கள். பெரிய பங்களிப்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கிறது. சிறிய பங்களிப்பு, அணி வெற்றி பெற உதவும். வெற்றி கோட்டைக் கடக்க உதவும் அந்தபங்களிப்பும் மிகவும் முக்கியமானது. நான் இருக்கும் வரை இதுதான் தத்துவமாக இருக்கும்.டி20 கிரிக்கெட் பயிற்சி முறைகளில் தரவுகளை நான் நம்புவதில்லை. அதை நான் பார்த்ததில்லை. தரவு எதைப் பற்றியது என்று கூட எனக்குத் தெரியாது. ஏனென்றால் பயிற்சி முறைகள் என்பது உள்ளுணர்வைப் பற்றியது என்று நான் உணர்கிறேன். டி20 கிரிக்கெட் என்பது உள்ளுணர்வைப் பற்றியது. விளையாட்டு மற்றும் டி 20 வடிவம் பற்றி எனக்கு என்ன அறிவு இருந்தாலும், அதை நான் கேப்டனுக்குக் கொடுக்க முயற்சிக்கிறேன், என்னால் முடிந்தவரை அவருக்கு உதவ முயற்சிக்கிறேன். ஆனால், இறுதி முடிவை எடுப்பது கேப்டன் தான்.















